search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாரதரத்னா விருது"

    ஜெயலலிதாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்குவதற்கான கோரிக்கையை பா.ம.க. நிச்சயமாக ஆதரிக்கும் என்று டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் கூட்டாக தெரிவித்துள்ளனர். #Jayalalithaa #Ramadoss #AnbumaniRamadoss
    சென்னை:

    பா.ம.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மாநிலங்களின் உரிமைகளே மத்திய அரசின் பெருமை. இதனை அடிப்படையாக கொண்டே, நன்கு ஆராய்ந்து தேர்தல் அறிக்கையை வடிவமைத்திருக்கிறோம். இது வழக்கமான சம்பிரதாயத்துக்காக வெளியிடப்படும் தேர்தல் அறிக்கை அல்ல. தமிழக மக்களின் தன்னாட்சி உரிமைக்குரல். தமிழக மக்களின் நலன்களை பாதுகாக்கும் குரலாகவும் எதிரொலிக்கும். நாங்கள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளவற்றில் எவற்றையெல்லாம், உடனடியாக நிறைவேற்ற முடியுமோ, அவற்றை நிறைவேற்றவேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்திருக்கிறோம்.

    புதிய இந்தியா, புதிய தமிழகத்தை நாங்கள் படைப்போம். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சந்தித்து உடல்நலம் குறித்து மட்டுமே விசாரித்தோம். தேர்தலை பற்றியோ, அரசியலை பற்றியோ ஒரு வார்த்தை கூட நாங்கள் பேசவில்லை. இரு தரப்பினருக்கும் தொகுதி பங்கீடு எல்லாம் முடிந்துவிட்டது.

    பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். அந்த வழக்கில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நிச்சயம் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்குவதற்கான கோரிக்கையை பா.ம.க. நிச்சயமாக ஆதரிக்கும். எதிர்க்கட்சிகள் செய்யும் வேலையை பா.ம.க. இந்திய அளவில் மிகவும் சிறப்பாக செய்து வருகிறது.



    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை பற்றி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ விமர்சிக்காததா?, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்யாததா? பழைய விஷயங்களை பற்றி பேசினால் யாரும் எந்த கூட்டணியிலும் இடம்பெற முடியாது. ஆனால் எங்களுடைய கோரிக்கையில் இருந்து நாங்கள் எள்ளளவும் பின் வாங்கவில்லை. எங்களுடைய தேர்தல் அறிக்கையை தி.மு.க. காப்பியடிக்கக்கூடாது.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #Jayalalithaa #Ramadoss #AnbumaniRamadoss
    பேரன்புக்கும், போற்றுதலுக்கும் உரிய கருணாநிதிக்கு இந்திய அரசு ‘பாரத ரத்னா’ விருது வழங்கிச் சிறப்பிக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். #Karunanidhi #Vaiko
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்கூறும் நல்லுலகின் தன்னேரில்லாத் தலைவர் கலைஞர், கோடிக்கணக்கானத் தமிழ் நெஞ்சங்களைத் துயர் கொள்ளச் செய்துவிட்டு, அண்ணாவுக்கு அருகில் துயில் கொள்ளச் சென்று விட்டார்கள்.

    ஐம்பது ஆண்டு காலம் திராவிட இயக்கத்துக்கு தலைமையேற்று வழிநடத்திய கலங்கரை விளக்கம் அணைந்து போனது. ஓயாத கடல் அலை போல உழைத்துக் கொண்டிருந்த ‘தமிழர்களின் சகாப்தம்’ தன் மூச்சை நிறுத்திக்கொண்டது.

    இந்திய அரசியல் தலைவர்களிலேயே எழுத்தாற்றலும், சொல்லாற்றலும் ஒருங்கே பெற்றிருந்த மக்கள் தலைவர் கலைஞர் ஒருவரே என்றால் அது மிகையல்ல.

    மேடையில் வீசிய மெல்லியப் பூங்காற்றாய், உலகத் தமிழர்களின் உள்ளத்தில் நிறைந்தவர், தன் ஈடற்ற எழுத்து வன்மையால் தமிழ் அன்னைக்கு முத்தாரங்கள் பலவற்றை அணிகலனாகப் பூட்டி மகிழ்ந்த வித்தகப் பெருமகன் கலைஞர்.

    வான்புகழ்கொண்ட வள்ளுவரின் குறளுக்கு அவர் தீட்டிய ‘குறளோவியம்’ தமிழரின் தொன்மைச் சிறப்பை இயம்பும் ‘தொல்காப்பியப் பூங்கா’, தமிழ் இனத்தின் பழைய பண்பாட்டின் புதிய வடிவத்தை கண்முன் நிறுத்தும் ‘சங்கத் தமிழ்’, கடலாண்ட தமிழனின் வரலாற்றைக் கூறும் ‘ரோமாபுரிப் பாண்டியன்’, தமிழ் மண்ணின் வீரம் மணக்கும் ‘தென்பாண்டிச் சிங்கம்’, ‘பொன்னர் சங்கர்’ போன்றவை கலைஞரின் சாகாவரம் பெற்ற இலக்கியப் படைப்புகள் ஆகும்.


    தமிழ்த் திரை உலகில் பேனா முனையில் புரட்சி கர வசனங்கள் தீட்டி, வண்ணத் தமிழுக்கு மேலும் அணிசேர்த்து காவியப் புகழ் கொண்டவர் கலைஞர்.

    ஐந்துமுறை தமிழகத்தின் முதலமைச்சர் பொறுப்பை ஏற்று, மக்கள் பணி ஆற்றிய கலைஞர், ஆட்சித் துறையில் அளப்பரிய சாதனைகள் நிகழ்த்தியவர்.

    இந்திய ஜனநாயகத்திற்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் வலுசேர்க்கும் வகையில், இந்தியாவிலேயே முதன் முதலில் சட்டப்பேரவையில் ‘மாநில சுயாட்சி’ தீர்மானத்தை நிறைவேற்றிய வரலாறு கலைஞருக்கு மட்டுமே உரியது ஆகும்.

    திராவிட இயக்கத்தின் ஆணி வேரான ‘சமூக நீதி’ தழைப்பதற்கு பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டு உரிமையை நிலைநாட்டியவர்.

    செம்மொழித் தமிழுக்கு சிறப்பான திட்டங்களால் பெருமை சேர்த்தவர். எண்ணிலடங்கா சமூக நலத் திட்டங்களுக்கு முன்னோடியான மாநிலம் தமிழ்நாடு என்ற கீர்த்தி கலைஞரால்தான் கிடைத்தது.

    பெண்களுக்கு சொத்து உரிமை வழங்கிட சட்டம், வேளாண்மை செழிக்க இலவச மின்சாரம் வழங்கும் திட்டம், கல்வி, சுகாதாரத் துறைகளில் தமிழகம் பெற்றிருக்கும் வளர்ச்சி, தொழில் துறையிலும், தகவல் தொழில்நுட்பத் துறையிலும் தலைசிறந்த மாநிலமாகத் திகழும் தமிழ்நாடு, இவையெல்லாம் கலைஞரின் ஆட்சித் திறனுக்கு சான்று கூறும் சரித்திரச் சாதனைகள் ஆகும்.

    தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்ற ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம்’ கொண்டு வந்த பெருமை கலைஞரையே சேரும்.

    இந்திய நாட்டில் தென்னகத்து ஒளிவிளக்காக ஏழு கோடி தமிழர்களின் நெஞ்சில் மட்டுமல்ல, மாநில எல்லைகளைக் கடந்து நாட்டு மக்கள் அனைவரது பேரன்புக்கும், போற்றுதலுக்கும் உரிய கலைஞருக்கு இந்திய அரசு ‘பாரத் ரத்னா’ விருது வழங்கிச் சிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #DMK #Karunanidhi #MDMK #Vaiko

    ×